கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை
கூடலூர் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சுற்றுலா திட்டங்கள்
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் இல்லாததால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூடலூரில் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா திட்டங்கள் தொடங்க வேண்டுமென நீண்ட காலமாக அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கூடலூர் நகராட்சி கவுன்சிலர்களும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் சந்தீப் நந்தூரி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் கூடலூர் பகுதியில் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இடங்களை பார்வையிட்டனர்
கூடலூர் அருகே நடுவட்டத்தில் உள்ள ஆங்கிலேயர் கால சிறைச்சாலை மற்றும் சில்வர் கிளவுட், பொன்னூர் பகுதியில் உள்ள கூடலூர் தோட்டக்கலைத்துறை பண்ணையை பார்வையிட்டு அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மார்த்தோமா நகரில் அரசு நிலத்தை பார்வையிட்டு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினர். பின்னர் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கூடலூர் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை கூடலூர் பகுதியில் அதிகமாகும் போது வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படும்.
ரோப் கார் திட்டம்
இதனால் நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, சில்வர் கிளவுட், மார்த்தோமா நகர், பொன்னூர் தோட்டக்கலைத்துறை பண்ணை ஆகிய இடங்களில் அதிகாரிகள் குழுவுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோல் சுற்றுலாப் பயணிகள் ஒரே பகுதியில் குவிவதை தடுக்க கூடலூர், கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளில் பரவலாக பல்வேறு திட்டங்கள் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வேலிவியூ-தொட்டபெட்டா இடையே ரோப்கார் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.