விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற நடவடிக்கை

விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2023-01-01 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. 5 தேசிய நெடுஞ்சாலைகள் 224 கி.மீ. நீளத்திலும், 15 மாநில நெடுஞ்சாலைகள் 274 கி.மீ. நீளத்திலும், மாவட்ட சாலைகள் 239 கி.மீ. நீளத்திலும், இதர மாவட்ட சாலைகள் 1,193 கி.மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகளினால் கடந்த 2021 நவம்பர் முதல் 2022 நவம்பர் வரை 1 வருடத்தில் ஏற்பட்ட 2,220 விபத்துகளில் 514 பேர் இறந்துள்ளனர். 2,636 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

216 விபத்து பகுதிகள்

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்து பகுதியை கண்டறிந்து நீண்ட காலத்திற்கு பயன்தரக்கூடிய வகையில் அப்பகுதியில் விபத்து ஏற்படாத வண்ணம் சாலைகளை சீரமைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 216 விபத்து பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு நிதியின் மூலம் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தினாலும், பொதுமக்கள், வாகன டிரைவர்கள் முறையாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் தேவையான இடங்களில் மெதுவாகவும், விழிப்புணர்வுடன் இயக்கிட வேண்டும். பஸ்களை முறையாக சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிட வேண்டும்.

விபத்தில்லாத மாவட்டமாக...

அனைத்து வகையான சாலைகளிலும் வேகத்தடை இருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடு வரைய வேண்டும். அறிவிப்பு பலகைகள், வாகனங்கள் நிறுத்தம் குறித்த தகவல்கள் தேவையான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளை மேம்படுத்தி தேவையான இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். திசைகாட்டும் பலகைகளை 50 மீட்டருக்கு முன்னரே நிறுவிட வேண்டும். ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்