கழுகை ராஜஸ்தான் சரணாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

கழுகை ராஜஸ்தான் சரணாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

Update: 2022-09-15 16:37 GMT

தக்கலை:

குமரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒகி புயலின் போது காற்றினால் அடித்து வரப்பட்ட சிறிய கழுகு குஞ்சு ஒன்று பறக்க முடியாமல் ஆசாரிபள்ளம் அருகில் கீழே விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பூதப்பாண்டி வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழுகை மீட்டு உரிய சிகிச்சை அளித்து தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி உதயகிரி பல்லுயிரின பூங்காவில் பராமரிக்க ஒப்படைக்கப்பட்டது.

அங்கு பெரிய இரும்பு வலைக் கூண்டுக்குள் நடமாடும் அளவிற்கு அடைத்து பராமரித்து வந்தனர். தற்போது அந்த கழுகு உயரத்தில் பறக்கும் உடல் தகுதி பெற்றிருப்பதால், கழுகுகள் கூட்டமாக வாழும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு அதனை மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மாவட்ட வன அலுவலர் இளையராஜா மேற்கொண்டார்.

அதன்படி கால்நடை மருத்துவர், கால்நடை விஞ்ஞானி ஆகியோரை கொண்ட குழுவினர் வருகிற 24-ந் தேதி உதயகிரியில் உள்ள கழுகினை பாதுகாப்பாக எடுத்து சென்று ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூர் என்ற இடத்தில் உள்ள கழுகு சரணாலயத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்