அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.;
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஆவின் பால் பாக்கெட் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துவிட்டு இதர பால் மற்றும் பால் பொருட்களின் விலையினை உயர்த்துவது, விநியோகத்தை குறைப்பது; மகளிருக்கு இலவச பேருந்து என்று சொல்லி அந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்ற வரிசையில் தற்போது அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது ஏழையெளிய மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகள் தனியாக கழன்று விழுவது, அடிச்சட்டங்கள் கழன்று விழுவது. மேற்கூரைகள் விழுவது, பிரேக் பிடிக்காதது போன்றவற்றின் காரணமாக பல்வேறு விபத்துகள் நிகழ்கின்றன. உயிரைப் பணயம் வைத்து ஏழை எளிய மக்கள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதற்கு கூடுதல் கட்டணம் வேறு.
நகரப் பேருந்துகளில், இரண்டாவது. மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட பேருந்து நிறுத்தங்களுக்கு முறையே 6 ரூபாய், 7 ரூபாய் மற்றும் 8 ரூபாய் என்று வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பயணிகளிடமிருந்து சிறிய இடைவெளியிலான, அதாவது இரண்டு கிலோ மீட்டருக்கு உட்பட்ட நிறுத்தங்களுக்குக்கூட 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்ட தூரத்திற்குகூட பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, சாதாரண பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா மட்டுமே தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்ததால்
வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இதையும் தாண்டி 75 பைசா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசா என்கிற கட்டணம் என்பது விரைவு பேருந்துகளுக்கு மட்டுமே. அதாவது விரைவு பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம். சாதாரண பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, விரைவுப் பேருந்து என்றால் குறைந்தபட்சம் 120 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்ற விதியும் மீறப்படுகிறது.
25 கிலோ மீட்டர் பயணிக்கும் பேருந்துகளுக்கு கூட விரைவுப் பேருந்து என்று போட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தொடர் புகாராக இருக்கிறது. ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நீதிமன்ற உத்தரவினை மீறி, போக்குவரத்து ஆணையரின் அறிவுரையினை மீறி, கூடுதல் கட்டணங்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களால் வசூலிக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 170 பேருந்துகள்மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. அரசின் உத்தரவை அரசே மீறுவது கண்டிக்கத்தக்கது.
முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை சாதாரண பேருந்துகளில் வசூலிப்பதை நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.