தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-07-02 18:43 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான தென்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை ஜூலை 5-ந் தேதிக்குள் அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அந்த தீர்ப்பாயத்தை அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை கடந்த ஜூன்29-ந் தேதி டெல்லியில் சந்தித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டுடனான தெண்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலை இருதரப்பு பேச்சுகளின் மூலம் தீர்த்துக் கொள்ள கர்நாடகம் விரும்புவதாவும், அதனால் தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தமிழகத்தின் உரிமையை சட்டவிரோதமாக வன்கைப்பற்றல் செய்து விட்டு பேசித் தீர்ப்போம் என்பதற்கு ஒப்பானது. குற்றமிழைத்தவர்கள் விசாரணையைத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பேச்சுகளை அல்ல. தென்பெண்ணை நீரை அணை கட்டி பறித்துக் கொள்ள துடிக்கும் கர்நாடகத்திற்கு, உரிமையை இழந்த தமிழகத்துடன் இணையாக அமர்ந்து பேசும் உரிமை கிடையாது. இதை தீர்ப்பாயம் தான் தீர்க்க வேண்டும்.

மத்திய அரசும் இந்த சிக்கலில் தமிழ்நாடு அரசை கட்டாயப் படுத்தக்கூடாது. மாறாக, கர்நாடக அரசின் அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக் கொண்டவாறு, தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அடுத்த 3 நாட்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்