மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்
மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது..
யூனியன் கூட்டம்
சிவகங்கை யூனியன் கூட்டம் ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையிலும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கேசவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேஸ்வரன், ஜோதீஸ்வரி, ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் கேசவன் பேசியதாவது:-
வாணியங்குடி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மருத்துவமனை பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அத்துடன் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. ெரயில்வே கேட்டில் இருந்து அண்ணாமலை நகர் வரை 14 மின்கம்பங்கள் உள்ளன. இதில் மூன்று கம்பங்களில் மட்டும் தான் விளக்கு எரிகிறது என்றார்.
கோவிந்தராஜன்:-அழகு மெய்ஞானபுரத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு சாலை இல்லாமல் உள்ளது. அதை அமைத்து தர வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
ரமேஷ்: ஒன்றியத்தில் பணிகள் முடித்த ஒப்பந்தக்காரர்களுக்கு உரிய பணம் வழங்கப்படாமல் உள்ளது என்று கூறுகிறார்கள். எனவே உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர்: விரைந்து பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நதியா:-மதகுபட்டியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.எனவே சாலையில் தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும். அலவாக்கோட்டையில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முத்துப்பட்டியில் புதியதாக பள்ளி கட்டப்பட்டு வருகிறது.அங்கு கண்டிப்பாக ஆழ்குழாய் கிணறு அமைத்து சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
குடிநீர்
மஞ்சுளா: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் பகுதியில் குடிநீர் இல்லாமல் உள்ளது. அதை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மாவதி: யூனியன் கூட்டங்களில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.
தொடர்ந்து பல்வேறு பொருட்களின் மீது விவாதம் நடைபெற்றது.