ஈரோடு மாநகராட்சி முழுவதும் குடிதண்ணீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-07-31 21:25 GMT

ஈரோடு மாநகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த கூட்டங்களில் பெரும்பாலான கவுன்சிலர்கள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்பேரில் நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குனர் ரேவதி, உதவி பொறியாளர்கள் பிரியதர்ஷினி, விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூட்டப்பொருள் தொடர்பாக விவாதித்தும், தங்கள் வார்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள்.

குடிநீர் வீணாகிறது

அப்போது கவுன்சிலர்கள் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்டம் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் வீடுகளுக்கான இணைப்பினை மாநகராட்சி மூலம் ஒப்பந்ததாரர்கள் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் வீடுகளில் இணைப்புகளுக்கு கட்டணம் கேட்கிறார்கள்.

ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கிறது. சில இடங்களில் சோதனை ஓட்டம் நடக்கிறது. பல இடங்களில் வீடுகள் வரை குழாய் கொடுத்து விட்டனர். ஆனால் அவற்றை தொட்டிகளுக்குள் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் தினமும் குடிதண்ணீர் வீணாகிக்கொண்டு இருக்கிறது. மாநகராட்சியின் ஒரு பகுதியில் இப்படி தண்ணீர் பொதுமக்களுக்கு பயன் இன்றி வீணாக போகிறது. இன்னொரு பகுதியில் தண்ணீருக்கு சிரமப்படும் மக்களுக்கு லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோன்ற அவல நிலை இனிமேலும் ஏற்படாமல் இருக்க குடிநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும்.

6-வது வார்டு பாரதிநகர் பகுதியில் குடிநீர் குழாய், சாக்கடை குழாய்க்குள் போடப்பட்டு இருக்கிறது. இதனால் சாக்கடை தண்ணீர் குடிநீருடன் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோல் கனிராவுத்தர் குளம் அருகே காந்திநகர், காமராஜர் நகர், பூம்புகார் நகர், பச்சப்பாளி மேடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மிகவும் அத்தியாவசியமானது. அதை மாநகராட்சியே கையில் எடுத்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் தங்களால் முடியவில்லை என்றால் அதை கூறிவிடலாம்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கூறினார்கள்.

வரைபடம்

மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி, காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணியம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து மற்றும் பெரும்பாலான கவுன்சிலர்கள் குடிநீர் வழங்கல் குறித்து பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'விரைவில் பணிகளை முடித்து விடுவோம். குடிநீர் திட்டம்தொடர்பான திட்டமிடல் வரைபடத்தில் இருப்பதுபோன்றே நாங்கள் வேலை செய்கிறோம்' என்றார்கள்.

இது இன்னும் கவுன்சிலர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்கள் பேசும்போது, 'திட்டம் தொடர்பான வரைபடங்களை அதிகாரிகள் அலுவலகத்தில் உட்கார்ந்து போடுவார்கள். ஆனால் மக்களுடன் மக்களாக உடன் இருந்து வேலை செய்வர்களுக்குதான் என்ன தேவை என்று தெரியும். வரைபடத்தின் படி நீங்கள் வேலை செய்யுங்கள். ஆனால், மக்களுக்கு பயன்படாத ஒரு வரைபடம் இருந்தால், அதை தேவையின் அடிப்படையில் மாற்ற வேண்டும். மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகத்தான் இந்த திட்டம். அதைத்தான் நிறைவேற்ற வேண்டும்' என்றார்கள்.

வருத்தம்

மேலும், 'கடந்த ஜூன் மாதமே திட்டப்பணிகளை முடித்து விடுவோம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையிலான கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஆனால் இப்போது ஆகஸ்டு மாதம் வந்து விட்டது. அமைச்சர் பதவியில் இருந்தாலும், அதிகாரிகளிடம் இந்த திட்டத்தை விரைவாக முடிக்க பணிவுடன் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கும் மரியாதை அளிக்காமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது' என்றும் கவுன்சிலர்கள் பேசினார்கள். தங்கள் வார்டுகளில் புதிதாக சாலைகளில் தார் போடப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் கவுன்சிலர்கள் பேசினார்கள்.

கூட்டத்தில் துணை ஆணையாளர் சுதா, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் சண்முகவடிவு, மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், சுகாதார அதிகாரி தங்கராஜ், இளநிலை பொறியாளர் பாஸ்கர், சம்பந்தம், நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்