மூதாட்டி வீட்டில் பணம் திருட்டு
பழனியில் மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
பழனி மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 80). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக உடுமலைக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வள்ளியம்மாள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டிலும் திருட முயற்சித்து உள்ளதும் தெரியவந்தது. பின்னர் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.