சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்தவர் சீனியம்மாள் (வயது58). இவர் காரியாபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு மகளிடமிருந்து ரூ. 10 ஆயிரம், 2 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு பையில் வைத்துக்கொண்டு காரியாபட்டியில் இருந்து பஸ்சில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வந்தார். அந்த பையில் அவரது செல்போனும் இருந்தது. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கி நடுவப்பட்டி செல்வதற்காக சாத்தூர் டவுன் பஸ்சில் ஏறினார். சாத்தூர் டவுன் பஸ் நிலையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது சீனியம்மாள் பையை பார்த்த போது பையில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை காணவில்லை. இதுபற்றி சீனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.