தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.
அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.
அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.
தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சி., அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், அண்ணா, பெரியார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திராகாந்தி போன்ற தலைவர்கள் சிலைகள் உள்பட மொத்தம் 83 சிலைகள் உள்ளன. இந்த சிலைகளில் 40 சதவீதம் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் கூண்டு போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சில சிலைகள் மழை, வெயிலில் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரையுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில சிலைகள் கூண்டு, மண்டபங்கள் இன்றி வெட்டவெளியாக விடப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை அந்தந்த அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும் சில சிலைகள் அவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் தவிர மற்ற நாட்களில் பராமரிப்பு இன்றி விடப்படுகிறது.
எச்சங்கள் விழுகின்றன
மேலும் வெட்டவெளியாக விடப்பட்ட சிலைகள் மீது பறவைகளின் எச்சங்கள் விழுகின்றன. தூசி படர்ந்து அழுக்கு படிந்தும் அந்த சிலைகள் காட்சியளிக்கின்றன. இது பொதுமக்களையும், அந்த தலைவர்களின் தொண்டர்களையும் மனவேதனை அடைய செய்கிறது. எனவே மாவட்டத்தில் உள்ள சிலைகள் அனைத்தையும் மழை, வெயிலில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் முக்கிய நாட்களில் மட்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்ட சிலைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பராமரிப்பு பணிகள்
மிதுன் (வியாபாரி, பழனி):- ஆன்மிக தலமான பழனியில் முக்கிய தலைவர்களுக்கு சிலைகள் உள்ளன. இதில் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு உள்ள காந்தி சிலை கூண்டுக்குள் அடைபட்டு இருக்கிறது. முறையான பராமரிப்பும் இல்லை. முக்கிய நாட்களில் மட்டுமே காந்தி சிலை சுத்தப்படுத்தப்படுகிறது. எனவே காந்தி சிலையை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவுக்கு மாற்றலாம். அப்படி செய்தால் சிலையும் பராமரிக்கப்படும். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பக்தர்களும் காந்தி சிலையை பார்த்து மகிழ்வார்கள். அதேபோல் அடிவாரம் சரவண பொய்கை அருகே வைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனையும் வேறு இடத்துக்கு மாற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மனோகரன் (வியாபாரி, திண்டுக்கல்):- நல்லாம்பட்டி சமத்துவபுரம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை முறையான பராமரிப்பு இன்றி இருந்தது. சிலையை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் தற்போது சிலைக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் செடி-கொடிகள் அகற்றப்படாமல் உள்ளது. பூங்காவுக்கு விளையாடுவதற்காக வருபவர்கள் சிலை அருகில் விளையாடும் போது அந்த இடத்தில் உள்ள புதர்கள் மட்டும் அகற்றப்பட்டுவிட்டது. மற்ற இடங்கள் புதர்மண்டியே காட்சியளிக்கிறது. எனவே புதர்களை அகற்றி பெரியார் சிலையை முறையாக பராமரிக்க வேண்டும்.