மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் மாநிலங்கள் வளர்ச்சி பெறும்-மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
ஊட்டி
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
மத்திய இணை மந்திரி பேட்டி
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்துள்ளார். இதையடுத்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை இந்தியா முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மத்திய மந்திரி ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 144 நாடாளுமன்ற தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த தொகுதிகளில் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவில் பாரதிய ஜனதாவை பலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
வருகிற 2014 தேர்தலிலும் பாரதிய ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
கடையடைப்பு
ஆ.ராசாவின் பேச்சு அநாகரிகமானது. இதனால் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அவரது பேச்சை கண்டித்து நீலகிரியில் நடந்த கடை அடைப்பு மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடைகளை திறக்க வலியுறுத்தி தி.மு.க.வினரும் போலீசாரும் மிரட்டல் விடுத்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆ.ராசாவை எம்.பி.யாக தேர்வு செய்ததற்கு நீலகிரி மக்கள் வெட்கப்படுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் தவறான வரலாறுகளை எழுதியுள்ளனர். காங்கிரசாரும், கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகத்தின் வரலாறை புரியாமல் அந்த தவறுகளை அப்படியே நம்புகின்றனர். ராஜராஜசோழன் இந்துதான், தமிழன்தான். இந்துக்களையும் தமிழர்களையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.
எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக 95 சதவீத பூர்வாங்க பணிகள் மட்டும் தான் முடிந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார். அந்த விஷயத்தை திசை திருப்பி சமூக வலைதளங்களில் பகிர்வது அரசியல் அநாகரீகம்.
தீபாவளி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்-அமைச்சர் தேர்தல் சமயத்தில் திருத்தணிக்கு வந்து கையில் வேல் பிடித்தார். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் மாறிவிட்டார். திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் ஆன்மீகத்தை தேடுவார்கள்.
தமிழகத்திற்கு 390 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளுக்கு முழுமையாக 100 சதவீதம் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் தமிழக அரசு இதுவரை அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதேபோல் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்ற மாநில அரசுதான் தாமதம் செய்கிறது. எனவே தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும். 2014-க்கு முன்னர் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய தலைவர்களுக்கு மரியாதை இல்லாத நிலையில், 2014-க்கு பின்னர் வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 2024-ல் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவன் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் இருந்தனர்.
முன்னதாக ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்த பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஊட்டி கஸ்தூரிபாய் காலனி பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்ட செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அதிகாரி ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.