மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு- சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டனர்.

Update: 2023-07-23 20:39 GMT


மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டனர்.

மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு

மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கையை தொடர்ந்து, மாநில உரிமைகளை பறிக்க நினைக்கும் செயலை கண்டித்தும், மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. ஓபுளாபடித்துறை பகுதியில் நடந்த இந்த மாநாட்டிற்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்த மாநாட்டில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், மனித நேய மக்கள் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி

மாநாட்டில், இந்திய ஒன்றியத்தை கூட்டாட்சி ஜனநாயகமாக வலுப்படுத்துவோம். மூன்றடுக்கு அதிகாரம் பரவலை வலியுறுத்துவோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும். கவர்னர் வழியாக மாநில ஆட்சி அதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை இந்த மாநாடு கண்டிக்கிறது. மாநில அரசுக்கு மேம்பட்ட சக்தியாக கவர்னர்களை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, கவர்னர்கள் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். கவர்னர்களின் அதிகாரத்திற்கு சட்ட வரம்பிட வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

மத்திய விசாரணை முகமைகளை ஏவி விட்டு, மாநில ஆட்சியை கலைப்பதற்கும், கட்சிகளை மிரட்டுவதும் விலை பேசுவதும் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும். இத்தகைய போக்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கல்வி கொள்கை

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அரசியல் சாசன 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும், மத்திய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்திட வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கான தனித்த கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், தெற்கு பகுதிக்குழு செயலாளர் லெனின் நன்றி கூறினார். இதில் மதுரை மட்டுமின்றி, தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்