புரோ விஷன் கண் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை
தென்காசி புரோ விஷன் கண் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி புரோ விஷன் கண் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன லேசர் மூலம் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து இந்த ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ராஜகுமாரி கூறியதாவது:-
சுரண்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 57) என்பவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பார்வை குறைந்து கண்களில் பூச்சி பறப்பது போன்று உணர்ந்துள்ளார். அவர் எங்கள் ஆஸ்பத்திரியில் என்னை சந்தித்தார். நாங்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு கண் விழித்திரை கிழிந்து நரம்பு பிரிந்து இருந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வாகும். ஆனால் நாங்கள் புதிய முறையில் நுட்பமாக ஊசி மற்றும் லேசர் மூலம் சிகிச்சை அளித்து பார்வையை மீட்டெடுத்தோம். இதுபோன்ற பாதிப்புக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிக்கு வலியும், குணமடைய மூன்று மாதங்களும் ஆகும். இந்த புதிய முறையில் மூன்றே நாட்களில் முழு பார்வையை மீட்க முடியும். இத்தகைய சிகிச்சையை தென்தமிழகத்தில் முதல்முறையாக நாங்கள் வெற்றிகரமாக செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சிகிச்சை பெற்ற சுந்தர்ராஜன், ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் நவீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.