மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்; இறுதிப்போட்டி இன்று நடக்கிறது

மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

Update: 2023-10-06 20:12 GMT

பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் திருச்சியில் மாநில அளவிலான எல்.எஸ்.எப். பெண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி போட்டி ஒன்றில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணியும், நத்திங் பட் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியை, போட்டி ஒருங்கிணைப்பாளர் லாவண்யா பிரின்ஸ் தொடங்கி வைத்தார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நத்திங் பட் அணி 29 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஷிகா 35 ரன்கள் எடுத்தார். பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பியர்லஸ் பைட்டர்ஸ் அணி 25.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக வைஷ்ணவி 28 ரன்கள் சேர்த்தார்.

மற்றொரு அரையிறுதியில் எஸ்.டி.ஜி. அண்டு எம்.ஐ.எஸ். ஏ அணியும், ஸ்பார்க் கிரிக்கெட் பவுண்டேசன் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.டி.ஜி. அண்டு எம்.ஐ.எஸ். ஏ அணி 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஸ்பார்க் கிரிக்கெட் பவுண்டேசன் அணி 27.1 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் எஸ்.டி.ஜி. அண்டு எம்.ஐ.எஸ். ஏ அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்