அணைக்கரையில் மாநில அளவிலான மின்னொளி கபடி விளையாட்டு போட்டியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி
திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரை அருகே பட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60 அணிகளை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) இரவு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. ஒன்றிய செயலாளர் கோ.க.அண்ணாதுரை வரவேற்றார். விழாவிற்கு மாவட்ட செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கோ.க. அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மசா மனோகரன், ரவி உதயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவுக்கு முன்னுதாரணம்
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டாஸ்போட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசுகையில், முதல்-அமைச்சர் தலைமையில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதன்படி அரசின் அனைத்து துறைகளிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பல இடங்களில் கபடி விளையாட்டு போட்டியை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு ஏனோ தானோ என்று கடமைக்கு நடத்தாமல் உண்மையிலேயே சிறப்பான ஏற்பாடுகளை செய்து மின்னொளியில் நடத்துவது பாராட்டுக்குரியது.
இரவு 11.45 மணிக்கு ஒரு மாநாடு போல் இங்கு கூட்டம் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள் தான் என்பதை பார்த்து பாராட்டுகிறேன் என்றார்.
இதில் நகர செயலாளர் சப்பாணி, ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், குமார், பாண்டியன், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.