திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி; பெண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம்
திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம் பிடித்தது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி கூடைப்பந்து மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில், சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் விளையாடின. போட்டிகள் நாக்-அவுட் மற்றும் லீக் சுற்றுகள் அடிப்படையில் நடந்தது.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டியில் நேற்று இறுதிப்போட்டிகள் நடந்தது. இதில் முதலாவதாக பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 64-46 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் ஏ.சி.எல்.எஸ். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரை தமிழ்நாடு போலீஸ் அணி 3-ம் இடம் பிடித்தது.
பின்னர் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் வத்தலக்குண்டு யங்ஸ்டார் அணி, நாகர்கோவில் அணியை 87-93 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவை போன்று ஆண்கள் பிரிவிலும் மதுரை தமிழ்நாடு போலீஸ் அணி 3-ம் இடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த வத்தலக்குண்டு அணிக்கு பி.எஸ்.என்.ஏ. பரிசுக்கோப்பை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம்பெற்ற நாகர்கோவில் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுகோப்பையும் வழங்கப்பட்டது.
இதேபோன்று பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணிக்கு ரூ.20 ஆயிரம், 2-ம் இடம்பெற்ற ஏ.சி.எல்.எஸ். அணிக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கபட்டது. பரிசுகளை பி.எஸ்.என்.ஏ. கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம் வழங்கினார். இதில் தொழில் அதிபர்கள் கபிலன், யூசுப் அன்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.