பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு

குற்றாலத்தில் பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நடந்தது.

Update: 2022-06-25 20:10 GMT

தமிழ்நாடு பேரூராட்சிகள் ஊழியர் சங்க 4-வது மாநில மாநாடு குற்றாலத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் உமாராணி தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான துரைசிங் வரவேற்றார். கந்தர்வ கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தொடங்கி வைத்தார். சங்க மாநில பொதுசெயலாளர் கனகராஜ், துணைத் தலைவர் தங்கவேல், செயலாளர் மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநிலத் தலைவர் அன்பரசு, துணை பொது செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் கிறிஸ்டோபர், நகராட்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரூராட்சி ஊழியர் சங்க மாநில துணை தலைவர்கள் முத்துராமலிங்கம், மோசஸ் ஆண்டனி, ஜோதிபாசு, தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகை மற்றும் வருவாய் கொண்டுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஆண்டுதோறும் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தரமான குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும். தகுதியுள்ள துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு அரசு செலவில் துப்புரவு ஆய்வாளர் பயிற்சி வழங்கி பதவி உயர்வு வழங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய பணியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்