பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடக்கம்

நீலகிரியில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-29 20:45 GMT

ஊட்டி

நீலகிரியில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு வருகிறது.

சைபர் கிளப்

கணினி அல்லது இணைய சேவை மூலம் நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் சைபர் குற்றங்களாகும். ஆரம்பத்தில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறும் கூறி மோசடி செய்தனர். தற்போது புதிது, புதிதாக மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், சைபர் குற்ற வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை என்பதற்காக இந்தியா 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை தென் மண்டலத்தில் உள்ளது. இதேபோல் சைபர் குற்றங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் கிளப் தொடங்க அறிவுறுத்தியது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் கூறியதாவது:-

சிறப்பு வகுப்புகள்

நீலகிரியில் முதல் கட்டமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி, தனியார் கல்லூரி, பிரிக்ஸ் பள்ளியில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இதற்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு, அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீலகிரியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புகார் அளிக்கலாம்

சைபர் குற்றங்களில் அதிகம் படித்தவர்கள் முதலில் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மோசடி ஆசாமிகளால் குறி வைக்கப்படுகின்றனர். ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டால், காலதாமதம் இன்றி அடுத்த 72 மணி நேரத்திற்குள் போலீசாரிடம் நேரில் புகார் அளித்தாலோ அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளித்தாலோ மோசடி செய்த பணத்தை வங்கியில் இருந்து முடக்கி திரும்பி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்