10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் 4 மையங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

Update: 2022-06-01 18:10 GMT

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் 4 மையங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

விடைத்தாள்கள்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது. இதுதவிர, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றன.

பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணியை கல்வித்துறை தொடங்கி உள்ளது. இதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெவ்வேறு மாவட்டத்தின் விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய 2 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியிலும், 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் ராமநாதபுரத்தில் இன்பென்ட் ஜீசஸ் பள்ளி, பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் திருத்தப்படுகின்றன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 450 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

திருத்தும் பணி

காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். வரும் 8-ந் தேதி வரை இந்த பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மையங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜியும், பரமக்குடி தேர்வு மையத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் ஆகியோரும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

விடைத்தாள் திருத்தம் நடைபெறுவதையொட்டி அந்தந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததும் 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும் என கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17-ந் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ந் தேதியும் வெளியாகும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்