வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலுநாச்சியார்
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாக கொண்ட வேலுநாச்சியார், ஆங்கிலேய படையெடுப்பால் கணவரை இழந்ததோடு, நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புடன் செயல்பட்டார்.
மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி வலுவான எதிர்ப்பு படையை உருவாக்கி 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. வேலுநாச்சியாரின் நினைவை போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை 62 நாடக கலைஞர்கள் மூலம் இசையார்ந்த நாட்டிய நாடகமாக அரங்கேற்ற தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை முடிவு செய்தது.
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அதன்படி, வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்தும் வகையிலான இலச்சினையை வெளியிட்டு, நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தலைவர் வாகை சந்திரசேகர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4 இடங்களில் நடக்கிறது
இந்த நாடக நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) ஈரோடு சி.என்.சி.கல்லூரியிலும், 21-ந் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்திலும், 22-ந் தேதி திருச்சி கலையரங்கத்திலும், 28-ந் தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.