பேரறிவாளனை நிரபராதி என்று ஏற்க முடியாது- அண்ணாமலை

“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கும் அதேவேளை, பேரறிவாளனை நிரபராதி என்று ஒரு போதும் ஏற்கவே முடியாது” என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-19 21:13 GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் நிரபராதி இல்லையே...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான பேரறிவாளனை, 142-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி சிறப்பு அதிகாரத்தின்கீழ் சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இது மிகவும் வித்தியாசமான தீர்ப்பு. பேரறிவாளன் நிரபராதி என்று கூறி இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போதுமே மறக்கக்கூடாது.

காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது. தமிழக மக்களை முட்டாளாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது. நளினியை காப்பாற்ற சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகள், சட்ட போராட்டம் ஒருபுறம், தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது ஒருபுறம் என இருக்கிறது.

தவறான முன்னுதாரணம்

காங்கிரசுக்கு உண்மையிலேயே ஆளுமை இருந்தால் தி.மு.க. அரசுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் வாங்கவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் கொண்டாடப்பட வேண்டிய நபர் கிடையாது. ராஜீவ்காந்தி படுகொலையின்போது போலீசார், அப்பாவி மக்கள் மடிந்து போயுள்ளனர். இவர்களுக்கெல்லாம் என்ன நீதி, நியாயம் இருக்கப்போகிறது? தியாகி போல பேரறிவாளனை கொண்டாடும் நிலையை என்ன சொல்வது? தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தி.மு.க., வரலாற்றில் ஒரு தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது. விமான நிலையத்துக்கே சென்று பேரறிவாளனை கட்டி ஆரத்தழுவி வரவேற்று, பெரிய சாதனை செய்தது போல முதல்-அமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார்.

மற்ற 6 பேரின் நிலைமை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு நாள் கூட பேரறிவாளன் சிறையில் இருந்தது இல்லை. 'பரோல்' நீட்டிப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. பேரறிவாளன் விடுதலை ஆனது, அவரது நடத்தை, 'பரோல்' காலத்தில் அவரது செயல்பாடு, எந்த குற்றச்சாட்டும் இல்லாதது போன்ற காரணங்களால் தான். இதை முன்வைத்து தான் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்துள்ளது. ஆனால் இந்த நடைமுறை மற்ற 6 பேருக்கும் பொருந்தவே பொருந்ததாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்