கொப்பரை உற்பத்தி பாதிப்பால் தோட்டங்களில் தேங்காய்கள் தேக்கம்

தொடர் மழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிப்பால் உலர் களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

Update: 2023-07-06 19:45 GMT

நெகமம்

தொடர் மழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிப்பால் உலர் களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

கொப்பரை உற்பத்தி

பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, காட்டம்பட்டி, வடசித்தூர், ஆண்டிபாளையம், சின்னநெகமம், ஆனைமலை பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 75 லட்சத்திற்கு மேல் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் கோவை, சூலூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, சென்னை, உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் 1,000-க்கும் மேற்பட்ட களங்களில் உடைத்து கொப்பரைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பணிக்கு உள்ளூர் தவிர வெளியூரில் இருந்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

வேலைக்கு தொழிலாளர்கள் இல்லை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் மரங்களின் ஏறி தேங்காய் அல்லது இளநீர் பறிக்கும்போது வழுக்கி கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை. சிலர், உயரம் குறைந்த தென்னை மரத்தில் கீழே நின்று கத்தி கம்பு மூலம் தேங்காய்களை பறித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மரத்துக்கு கூலியாக ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை மற்றும் பறித்த தேங்காய்களை குவித்து வைக்க கூலியாக ரூ.300 வழங்கப்படுகிறது.

தேக்கம் அடைந்த தேங்காய்கள்

எனினும் கத்தி கம்பு மூலம் தேங்காய் பறிப்பது குறைவாகவே உள்ளது. இதனால் தொழிலாளர்களை மூலம் தேங்காய் பறிப்பதையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மழை காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, தேங்காய் பறிக்கப்படாமல் மரத்திலேயே தேக்கம் அடைந்து கிடக்கிறது.

மேலும் போதிய வெயில் அடிக்காததால், உலர் களங்களில் தேங்காய் உடைத்து கொப்பரை உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வெறிச்சோடி உள்ளது. இதனால் பறிக்கப்பட்ட தேங்காய்களும் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.இதன் காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்