மாதவரம் அருகே தெருக்களில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மாதவரம் அருகே தெருக்களில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-19 07:57 GMT

தெருக்களில் கழிவுநீர்

சென்னை மாதவரம் கல்கொட்டா ஷாப், கண்ணபிரான் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள தெருக்களின் இருபுறமும் மழைநீர் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேற முடியாமல் தெருக்களில் வழிந்தோடியதால் தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை மறியல்

தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மாதவரம் தபால் பெட்டி அம்பேத்கர் சிலை எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் இதில் சிக்கிக்கொண்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மண்டல அலுவலக அதிகாரிகளையும் அங்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்