அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கும் மழைநீர்

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.;

Update:2022-10-08 00:15 IST

திருப்பத்தூர், 

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் நகர் மத்தியில் உள்ளதால் அவை சந்திப்பு பகுதியாக விளங்கி வருகிறது. இங்கிருந்து தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதுக்கோட்டை, திருமயம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ் போக்குவரத்து இயங்கி வருவதால் தினந்தோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

திருப்பத்தூர்-மதுரை சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏற்படும் அவசரகால சிகிச்சை, விபத்து சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு இந்த மருத்துவமனை அதிகமாக பயன்பட்டு வருகிறது. இதுதவிர இப்பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி பெறும் மருத்துவமனையாகவும் திகழ்ந்து வருகிறது. நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தேங்கும் தண்ணீர்

இத்தகைய இந்த மருத்துவமனையில் சுகாதார பிரச்சினை என்பது தீர்க்க முடியாததாக உள்ளது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தரம் பெற்ற மருத்துவமனையாக இருந்தாலும் இந்த மருத்துவமனையில் சில பிரச்சினைகளும் இருந்து வருகிறது. அதில் குறிப்பாக மழைக்காலங்களில் மருத்துவமனையில் இருந்து மழைதண்ணீர் வெளியே செல்ல வடிகால் இல்லாததால் மருத்துவமனையை சுற்றிலும் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மருத்துவமனை முன்பு குளம்போல் தேங்கும் தண்ணீர் பல நாட்களாக வெளியேற முடியாத நிலை இருப்பதால் அங்கேயே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் கொசு உற்பத்தியும், பிற விஷ பூச்சிகள் மருத்துவமனைக்குள் படையெடுக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. இதன்காரணமாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க நிரந்தர தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மழைக்காலம் தொடங்கும் முன்

இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது:- ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த மருத்துவமனை முன்பு தேங்கும் மழைநீர் உடனடியாக வெளியேற போதிய வடிகால் வாய்க்கால் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ளது. இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் அதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக இந்த மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை முன்பு பேவர் பிளாக் கற்கள் பதித்து அழகிய பூங்காக்கள் உருவாக்கினால் மழைநீர் தேங்காத நிலை ஏற்படும் என்றார்.

ராமசாமி:- திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிறப்பு வாய்ந்த மருத்துவனை. இங்கு பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குவது சிரமமாக உள்ளது. இதுதவிர மருத்துமனையின் முன்பு உள்ள இரு கேட் பகுதியில் ஒன்று மட்டும் செயல்பட்டு வருகிறது. மற்றொன்று பூட்டிய நிலையில் உள்ளது. இதையும் பயன்படுத்தினால் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்றார்.

அருண் (திருப்பத்தூர்):- திருப்பத்தூரில் உள்ள இந்த அரசு மருத்துவமனையில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் இங்கு கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனையை நன்றாக பராமரிக்க வேண்டிய கடமை அரசிற்கும் மட்டுமல்ல அனைவருக்கும் இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் சுகாதார பிரச்சனை இல்லாமல் இந்த மருத்துவமனை செயல்பட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்