குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2022-10-14 22:28 GMT

காட்டாறு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்பத்தியாகும் அரியாறு என்ற காட்டாறு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பொன்னணியாறு அணையை அடைந்து, அங்கிருந்து மணப்பாறை, ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடி, வடக்குஅரியாவூர், நவலூர், தாயனூர், அல்லித்துறை, புங்கனூர், இனியானூர், பிராட்டியூர் வழியாக வந்து தீரன்நகரில் உள்ள கோரையாற்றில் கலக்கிறது. இந்த காட்டாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து இனியானூர் வரை ஆற்றுக்கு உண்டான அகலத்துடன் காணப்படுகிறது. ஆனால் இனியானூரில் இருந்து இந்த காட்டாறு சுருங்கி வாய்க்காலாக மாறி கோரையாற்றில் கலக்கிறது.

பொன்னணியாறு அணை நிரம்பினாலோ அல்லது மணப்பாறை, ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடி, வடக்குஅரியாவூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தாலோ அரியாறுதான் வடிகாலாக உள்ளது. மேலும் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது, தாயனூர் அருகே உள்ள நவலூர் கிராமத்தில் அரியாற்று நீர் மேலேயும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் நீர் கீழேயும் செல்லும் வகையில் நீர் போக்கி உள்ளது.

வெள்ளம் சூழ்கிறது

இந்த நீர் போக்கி வழியாக புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது அரியாற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். எனவே மழைக்காலத்தில் இந்த வடிகால் நீரும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் நீரும் வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்போது தாயனூர், அல்லித்துறை, புங்கனூர் போன்ற பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளை வெள்ளம் சூழ்வது வழக்கம். மேலும் இனியானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வர்மாநகர், ஏ.ஏ.ஓ. காலனி, குபேரன்நகர், கவுரி நகர், வலம்புரி நகர், பிராட்டியூர், தீரன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதும் ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.

தேங்கி நிற்கும் தண்ணீர்

அதேபோல் இந்த ஆண்டு வந்த வெள்ளத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இனியானூர் -அல்லித்துறை சாலையை உடைத்து தண்ணீரை ஒரு குடியிருப்பு பகுதி வழியாக வெளியேற்றினார்கள். பின்னர் அந்த சாலை சீரமைக்கப்படாமல், தற்போது மிகவும் மோசமானதாக காணப்படுகிறது. அதில் மணலை கொட்டி நிரப்பியதால் அந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ெபய்த மழையை தொடர்ந்து, அரியாற்றில் வந்த சிறிதளவு தண்ணீருக்கே கரையில் உடைப்பு ஏற்பட்டு அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சுபதம் அவன்யு பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்து, தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.

துர்நாற்றம் வீசுகிறது

தேங்கிய நீர் வடியாத காரணத்தால் துர்நாற்றம் வீசுவதோடு டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். இனியானூர், வர்மா நகரில் இருந்து இனியானூர் குழுமாயிஅம்மன் கோவில் வரை உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாராததாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. எனவே மழைக்காலத்திற்கு முன்பே அரியாற்றின் கரையை பலப்படுத்தவும், வடிகால்களை தூர்வாரி, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீரை வெளியேற்றவும், உடைக்கப்பட்ட சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்த்தொற்று பரவும் அபாயம்

இது குறித்து குடும்பத்தலைவி ஷீலா கூறுகையில், சுபதம் அவென்யூ பகுதியில் மழை நீர் மற்றும் வடிவால் வாய்க்காலில் இருந்து வரும் உபரிநீர் எங்கள் பகுதியை சூழ்ந்து உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீரை வெளியேற்றவும், மீண்டும் இப்பகுதியில் தண்ணீர் புகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்