தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்

வைத்தீஸ்வரன் கோவில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிகை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-25 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, மருவத்தூர், கரைமேடு, ஆலவேலி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக அடுக்கி வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர்.

தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்

இந்த கொள்முதல் நிலையத்தில் தினமும் மிகக் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் கொள்ளப்படாததால் சுமார் 15 நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் இரவு அங்கேயே தங்கி நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.

உடனுக்குடன் கொள்முதல்

மேலும் திடீர், திடீரென மழை வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்யவும், கொண்டு வரப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்