தாவரவியல் பூங்காவில் பணியாளர்கள்உள்ளிருப்பு போராட்டம்

ஊதிய உயர்வு கேட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-23 18:45 GMT

ஊட்டி,

ஊதிய உயர்வு கேட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் தோட்டக்கலை பண்ணைகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிைறவேற்ற வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

பணியாளர்கள் பூங்கா நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து பூங்கா மற்றும் பண்ணைகளில் 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிபுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.

ரூ.700 ஊதியம்

இதுகுறித்து பணியாளர்கள் கூறியதாவது:-

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 முதல் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். அவர்கள் கண்டு ரசிக்கும் வகையில் பூங்காக்களை தயார்படுத்தும் பணியில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணைகளிலும் விதை உற்பத்தி, பண்ணை மேம்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களுக்கு தினக்கூலியாக ரூ.425 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அரசாணையின் படி நாள் ஒன்றுக்கு ரூ.700 அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை காலியாக உள்ள பூங்கா மற்றும் பண்ணைகளில் நிரந்தர பணியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்