டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வைக்க இடமில்லாமல் திணறும் ஊழியர்கள்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வைக்க போதிய இடவசதி இல்லாததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2022-06-07 14:41 GMT

கூடலூர், ஜூன்.8-

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வைக்க போதிய இடவசதி இல்லாததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பி வாங்கும் திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் வனப்பகுதியில் அதிகளவு வீசப்படுவதாக பொதுநல வழக்கு கோர்ட்டில் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் குப்பை கழிவுகள் மற்றும் காலி பாட்டில்கள் வீசுவதற்கு கோர்ட்டு தடைவிதித்தது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் விற்பனையாகும் மதுபாட்டில்களை மீண்டும் திருப்பி வாங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோாட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள 75 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக மது வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து பாட்டில்களை அடையாளம் படுத்தும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஊழியர்கள் திணறல்

இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து திருப்பி பெறப்படும் காலி பாட்டில்களை ஊழியர்களிடம் இருந்து டாஸ்மாக் நிர்வாகம் உடனுக்குடன் பெறுவதில்லை. இதனால் ஒவ்வொரு கடைகளிலும் சராசரியாக தினமும் 2 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால் ஊழியர்கள் காலி மதுபாட்டில்களை வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் மூடை கணக்கில் ஒவ்வொரு கடைகளிலும் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான கடைகளில் போதிய இடவசதி இல்லாததால் திறந்தவெளியில் பாதுகாப்பு இன்றி காலி பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் காலி பாட்டில்கள் களவு போகவும் வாய்ப்புள்ளது. இதனால் தினமும் சேரக்கூடிய காலி பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் நீலகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்த முடிவு

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு கடையும் சுமார் 100 முதல் 150 சதுர அடி பரப்பளவு கொண்டது. மது பாட்டில்கள் வைப்பதற்கு மட்டுமே இடம் உள்ளது. தற்போது காலி பாட்டில்களை திருப்பி வாங்குவது நல்ல திட்டம். ஆனால் அதற்கு ஏற்றார்போல் கடைகளில் போதிய இடவசதி இல்லை. தினமும் ஒவ்வொரு கடைகளிலும் 2 ஆயிரம் காலி பாட்டில்கள் திருப்பி பெறப்படுகிறது.

இதை பாதுகாப்பாக வைப்பது பெரிய சவாலாக உள்ளது. இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்