பஞ்சர் கடைக்காரருக்கு கத்திக்குத்து

ஓசூரில் முதல் மனைவியுடன் வாழ மறுத்த பஞ்சர் கடைக்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-08 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் முதல் மனைவியுடன் வாழ மறுத்த பஞ்சர் கடைக்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சர் கடைக்காரர்

ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ஆரிப் (வயது 38). இவர் கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியில் உள்ள கொல்லப்பேட்டையை சேர்ந்த சல்மா தாஜ் என்பவரை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், ஆரிப் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை விட்டு விட்டு 2-வதாக ஆயிஷா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆரிப் அந்த பகுதியில் பஞ்சர் கடை வைத்து இருந்தார். இவர் முதல் மனைவியோடு வாழ வேண்டி அவரது குடும்பத்தினர் ஆரிப்பிடம் பல முறை கூறியும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இதையடுத்து ஆரிப்பை ஓசூருக்கு வரவழைத்த முதல் மனைவியின் குடும்பத்தினர் ஜமாத் மூலமாக நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் தம்பி ஜமீர் (28) என்பவர் ஆரிப்பை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் அவருக்கு குடல் சரிந்தது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஆரிப்பை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்