புனித சூசையப்பர் தேவாலய ஆண்டு விழா

ஊட்டியில் புனித சூசையப்பர் தேவாலய ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-02-04 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் புனித சூசையப்பர் தேவாலய ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சூசையப்பர் தேவாலயம்

ஊட்டி செயின்ட் மேரிஸ்ஹில் உட்காக் சாலையில் அமைந்துள்ள மானந்தவாடி மறை மாவட்ட புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஆண்டு விழா, நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கு குரு சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் விழா கொடியை மந்திரித்து ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து பங்கு குருக்கள் ஜெய்மோன் களம்புக்காடு மற்றும் அகஸ்டின் தலைமையில் சிறப்பு நவநாள் திருப்பலி நடைபெற்றது. புனித சூசையப்பர், பரிசுத்த தேவமாதா, புனித செபஸ்தியார் ஆகியோரின் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து கொடியேற்றத்துடன் ஆடம்பர கூட்டு திருப்பலி சிறப்பிக்கப்பட்டு, திவ்ய நற்கருணை பவனி சிறப்பு ஆசீர் வழங்கப்பட்டது.

ஆடம்பர நவநாள் திருப்பலி

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆடம்பர நவநாள் திருப்பலி மார்டின் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊட்டி மறை மாவட்ட பங்கு தந்தை ஸ்டீபன் லாசர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முப்பெரும் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் பங்குத்தந்தை சஜி இளயிடத்து தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்கு தந்தை செல்வநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை செயலர் வர்கீஸ், ஆலய அறங்காவலர்கள் வினோத் ஐசக், இன்னி ஜார்ஜ், நேகி தாமஸ் மற்றும் எட்வின் தையில், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்