புனித இஞ்ஞாசியார் தேர்த்திருவிழா

Update: 2023-07-31 19:30 GMT

கிருஷ்ணகிரியில் புனித இஞ்ஞாசியார் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய இஞ்ஞாசியார்

ஜெர்மன் நாட்டின் போர்ப்படை தளபதியாக இருந்த லோயாலோ இக்னேஷியஸ், ஓய்வு நாளில் பைபிள் படித்துக் கொண்டிருந்த போது, மனம் மாற்றம் ஏற்பட்டு போர்ப்படை தளபதி பணியை விட்டுவிட்டு, துறவம் பூண்டு மக்களுக்காகவே சேவைகள் செய்து காலமானார். பின்னர், உலக கத்தோலிக்க போப்பாண்டவர் மூலம் லோயாலோ இக்னேஷியஸூக்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

அவரின் நினைவாக கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 98 ஆண்டுகளுக்கு முன் புனிதர் இஞ்ஞாசியார் பெயரால் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயம் கடந்த 2017-ம் ஆண்டு புனரமைத்து கட்டப்பட்டது.

தேர்த்திருவிழா

இந்த ஆலயத்தில், புனித இஞ்ஞாசியார் தேர் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனிய இஞ்ஞாசியாரின் திருத்தேரை, பாதிரியார் இருதயநாதன் மந்தரித்தார். வழக்கமாக இத்தேர் பழையபேட்டை, குப்பம் சாலை, மீன் மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வருவது வழக்கம்.

ஆனால் கடந்த 29-ந் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 9 பேர் இறந்ததால், தேர் வெளியில் பவனி செல்லாமல் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம் மற்றும் சுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மேலும் செய்திகள்