எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது - 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.;
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.
முதல் நாளான நேற்று தமிழ் தாள் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தேர்வு எழுத இருந்த மாணவிகளை பார்த்து, 'தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள், எதற்கும் பயப்பட வேண்டாம்' என்று அறிவுரை வழங்கினார். பின்னர்,
மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு தேவையான எழுதுப் பொருட்களை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழ் தாள் தேர்வை பொறுத்தவரையில், வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்டு இருந்ததாகவும், அனைத்து வினாக்களும் பதில் அளிக்கக்கூடிய வகையில் இருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே பிளஸ்-2 பொதுத் தேர்வு மொழிப் பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதாதது தேர்வுத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தினால் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.
அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விலும் மாணவர் ஆப்சென்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பதில் கல்வித் துறை மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றாற்போல், தேர்வுக்கு முன்பு எவ்வளவு பேர் தேர்வை எழுதுகிறார்கள்? என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. அதேபோல், தேர்வு முடிந்ததும், எவ்வளவு பேர் தேர்வை எழுதவில்லை என்ற விவரத்தையும் அரசு தேர்வுத் துறை வெளியிடவில்லை.
ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத் தேர்வில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆனதால், பொதுத் தேர்விலும் அது எதிரொலிக்கும் என நினைத்து கல்வித் துறை திட்டமிட்டே புள்ளி விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் மூலம் பெரும்பாலான மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதவில்லை என்ற பேச்சு நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை?
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழ் தாள் தேர்வை எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற விவரங்களை தேர்வுத் துறை வெளியிடவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, விழுப்புரத்தில் 960 பேரும், கள்ளக்குறிச்சியில் 968 பேரும், கடலூரில் 628 பேரும் தேர்வு எழுதாதது தெரியவந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு ஓராண்டாக வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களும் இந்த 'ஆப்சென்ட்' பட்டியலில்தான் வருவார்கள்.
அந்த வகையில் பிளஸ்-2 தேர்வை போலவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதவில்லை என்ற தகவல்கள் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிடக்கூடிய தேர்வுத் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 'ஆப்சென்ட்' பட்டியல் வந்த நிலையிலும், அதை வெளியிட மறுப்பது ஏன்? என்பதுதான் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.