பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2023-05-19 20:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் 20-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இதற்கிடையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளி மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்து மேல்நிலைப்பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பங்களை பெறுவதற்கு சென்றனர். பள்ளிகளில் சந்தித்து கொண்ட மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை கேட்டு தெரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

95 சதவீதம் பேர் தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 87 பள்ளிைய சேர்ந்த மாணவர்கள் 4770 பேரும், மாணவிகள் 4664 பேரும் சேர்த்து மொத்தம் 9434 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4387 பேரும், மாணவிகள் 4538 பேரும் சேர்த்து 8925 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92 பேரும், மாணவிகள் 97 பேரும் தேர்ச்சி பெறவில்லை.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாகும். மேலும் 21 அரசு பள்ளிகளும், 3 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 54 தனியார் பள்ளிகளும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

வால்பாறை

வால்பாறையில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 20 -ந் தேதி வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 502 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இதில் 484 மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சோலையாறு அணை, அட்டகட்டி ஆகிய இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளும், சிங்கோனா, வாட்டர் பால்ஸ் மற்றும் காடம்பாறை பகுதி மூன்று அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி 40 பேரும், அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 பேர் தேர்வு எழுதி 4 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் வாட்டர்பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 14 பேர் தேர்வு எழுதி 14 பேரும், சிங்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 பேர் தேர்வு எழுதி 9 பேரும், காடம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 1 மாணவி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வாட்டர்பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளில் மூன்று பேர் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வால்பாறையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 10- வகுப்பு பொதுத் தேர்வில் அதிக அளவிலான மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளஸ்-1 பொதுத்தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி


தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து செல்போன் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 95 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3358 பேரும், மாணவிகள் 4093 பேரும் சேர்த்து மொத்தம் 7451 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 3079 பேரும், மாணவிகள் 3925 பேரும் சேர்த்து மொத்தம் 7004 பேர் தேர்ச்சி பெற்றனர். இது கல்வி மாவட்டத்தில் 94 சதவீத தேர்ச்சியாகும். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். கல்வி மாவட்டத்தில் செஞ்சேரிபுத்தூா அரசு மேல்நிலைப்பள்ளி, ஜே.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளும், 1 அரசு உதவி பெறும் பள்ளியும், 42 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்