பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9,044 பேர் எழுதினார்கள்-403 பேர் வரவில்லை
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9044 பேர் எழுதினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9044 பேர் எழுதினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 4,824 பேரும், மாணவிகள் 4,623 பேரும் சேர்த்து மொத்தம் 9,447 பேர் எழுத இருந்தனர். இதில் மாணவர்கள் 4,546 பேரும், மாணவிகள் 4498 பேரும் சேர்த்து மொத்தம் 9044 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 278 பேரும், மாணவிகள் 125 பேரும் சேர்த்து மொத்தம் 403 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறையில் 47 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 52 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 600 பேரும், 50 பறக்கும் படையினரும் மற்றும் நிலையான பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கல்வி அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வழித்தட அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டு சென்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் முருகேசன் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அவர் மாணவ- மாணவிகளிடம் தேர்வு மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதை தவிர பறக்கும் படையினரும் அவ்வப்போது தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தேர்வு எளிது
தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
மாணவி கோபிகா:- முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத சென்றதால் சற்று பதற்றமாக இருந்தது. தேர்வு மையத்தில் வினாத்தாளை வாங்கி பார்த்ததும் எளிதாக இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தகத்தில் இருந்து ஏற்கனவே படித்த கேள்விகள் கேட்கப்பட்டதால் எளிதில் விடை அளிக்க முடிந்தது.
மாணவி ஸ்ரீபாவனா:- எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எப்படி இருக்குமோ என்கிற ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் நான் நினைத்ததை விட தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஒரு சில கேள்விகள் தான் புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளும் பதில் அளிக்க கூடிய வகையில்தான் இருந்தது. இதனால் நிச்சயம் முழுமதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்று இனி வரும் தேர்வுகளும் எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
வால்பாறை
வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 11 பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நேற்று முதல் நாள் தமிழ் தேர்வு எழுதினார்கள். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது கூறியதாவது:-
மாணவன் ஜீவா:- தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிந்தது. போதிய கால அவகாசமும் இருந்தது. வருகின்ற நாட்களில் வரக்கூடிய தேர்வுகளும் இதே போல் இருந்தால் நன்றாக இருக்கும்.
மாணவி ரின்சினா:- தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. தமிழ் இலக்கண கேள்விகள் புரிந்து கொள்ளும் படியாக எளிமையாக இருந்ததால் சரியான விடைகளை எழுத முடிந்தது. சரியான விடைகளை விரைவாக எழுத முடிந்ததால் விடைத்தாளை மறு பார்வை செய்வதற்கு நேரம் இருந்தது.
மாணவி சுமதி:- தமிழ் தேர்வில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் சுலபமாக விடைகளை எழுத முடிந்தது. தமிழ் தேர்வு எளிதாக இருந்த உற்சாகத்துடன் இனிவரக்கூடிய தேர்வுகளையும் சிறப்பாக எழுதுவோம்.