2014 முதல் 2019-ம் ஆண்டு வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு: தேர்வுத்துறை உதவி இயக்குனர் தகவல்

2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்வுத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2022-11-13 18:45 GMT

அசல் மதிப்பெண் சான்றிதழ்

தேனி அரசு தேர்வு துறை உதவி இயக்குனர் மணிமாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இடைநிலைப் பொதுத்தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும், நேரடியாக தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்படுகிறது. தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் ஒரு மாதத்திற்கு பிறகு அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று பாதுகாப்பாக வைக்கப்படும்.

தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலக எல்கைக்குட்பட்ட உத்தமபாளையம், பெரியகுளம் மற்றும் தேனி கல்வி மாவட்டங்களில் இருந்து இடைநிலைப் பொதுத் தேர்வினை (எஸ்.எஸ்.எல்.சி) 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பருவங்களில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களில் தேர்வு மையங்களில் சான்றிதழ் பெறாதவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அழிக்கப்படும்

விதிகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்ட தேதியில் இருந்து 2 ஆண்டுகள் கழித்து தேர்வர்களால் உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும்.

எனவே, 2014-ம் ஆண்டு மார்ச் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பருவங்களில் இடைநிலைப் பொதுத் தேர்வு எழுதி இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைத்து பெறப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ், பதிவுத்தாள் ஆகியவற்றை பெறாத தனித்தேர்வர்கள் வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது மதிப்பெண் சான்றிதழ் கோரும் கடிதத்துடன் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு மற்றும் ரூ.45 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பியோ தபால் மூலம் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்