எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை19,504 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி உள்ள நிலையில் முதல்நாளான நேற்று தமிழ் தேர்வை 19,504 மாணவ, மாணவிகள் எழுதினர். 344 பேர் தேர்வுக்கு வரவில்லை.;

Update: 2023-04-06 18:45 GMT

10-ம் வகுப்பு தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 335 மாணவர்கள், 9,513 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 848 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 92 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இதேபோல் தனித்தேர்வர்களாக 627 மாணவர்கள், 360 மாணவிகள் 987 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்காக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

344 பேர் தேர்வுக்கு வரவில்லை

முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இதில் மொத்தம் உள்ள 19,848 மாணவ, மாணவிகளில் 19 ஆயிரத்து 504 பேர் தேர்வு எழுதினர். 344 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் தனித்தேர்வர்களில் தமிழ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இருந்த 348 பேரில், 308 பேர் தேர்வு எழுதினர். 40 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவிகளில் 256 பேர் மாற்றுத்திறனாளிகள். எனவே அவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,793 அறை கண்காணிப்பாளர்கள், 141 பறக்கும் படை உறுப்பினர்கள், 9 கட்டுகாப்பு மைய அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக அனைத்து மையங்களிலும் தேர்வு தொடங்குவதற்கு முன்பு முதன்மை கண்காணிப்பாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்