எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8,138 மாணவ-மாணவிகள் எழுதினர்
நாகை மாவட்டத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8,138 மாணவ, மாணவிகள் எழுதினர்.
நாகை மாவட்டத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8,138 மாணவ, மாணவிகள் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் நேற்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு தொடங்கியது. அதன்படி நாகை மாவட்டத்தில் 138 அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 34 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர்.
காலை முதலே மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதுவதற்காக பள்ளிகளுக்கு வந்தனர். தொடர்ந்து நுழைவுவாயிலில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு அறை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பில் தங்களது பதிவு எண்களை சரி பார்த்துவிட்டு தேர்வு அறைக்கு சென்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்
நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு வந்த மாணவிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி படத்தின் முன்பு நின்று, தேர்வை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.தொடர்ந்து அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள், தைரியத்துடன் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவிகளை உற்சாகப்படுத்தி, ஆரத்தி எடுத்து தேர்வு மையத்துக்கு வழி அனுப்பி வைத்தனர்.
இந்த பொதுத்தேர்வுக்காக நாகை மாவட்டத்தில் 10 பறக்கும் படை குழுவினரும், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து தேர்வு மைய நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,379 மாணவர்களும், 4,126 மாணவிகளும் என மொத்தம் 8,505 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 4,127 மாணவர்களும், 4,011 மாணவிகளும் என 8,138 பேர் தேர்வு எழுதினர். 252 மாணவர்களும், 115 மாணவிகளும் என மொத்தம் 367 பேர் தேர்வு எழுத வரவில்லை.
107 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கலெக்டர் ஆய்வு
நாகை மாவட்டம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.