எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 22 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் வெற்றி

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 91.11 சதவீதமாக பதிவாகி உள்ளது.

Update: 2022-06-20 20:25 GMT

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 91.11 சதவீதமாக பதிவாகி உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சென்னையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் செல்போன்களிலேயே அவரவர் மதிப்பெண்களை பார்வையிட்டனர். நேற்று வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஏராளமானவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 174 அரசு பள்ளிக்கூடங்கள், 9 நகரவை பள்ளிக்கூடங்கள், 27 அரசு நிதி உதவி பள்ளிக்கூடங்கள், 5 நலத்துறை பள்ளிகள், 29 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 120 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 364 பள்ளிக்கூடங்களில் படித்த 12 ஆயிரத்து 505 மாணவர்கள், 12 ஆயிரத்து 242 மாணவிகள் என 24 ஆயிரத்து 747 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

91.11 சதவீதம் தேர்ச்சி

இதில் 10 ஆயிரத்து 913 மாணவர்கள், 11 ஆயிரத்து 635 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 548 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 91.11 சதவீதமாகும்.

364 பள்ளிக்கூடங்களில் 20 அரசு பள்ளிக்கூடங்கள், 1 நகரவை பள்ளிக்கூடம், 4 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 18 சுயநிதி பள்ளிகள், 84 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என 127 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

கல்வி மாவட்டம்

ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 109 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 850 மாணவ-மாணவிகளில் 8 ஆயிரத்து 276 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 93.51 சதவீத தேர்ச்சியாகும். பெருந்துறை கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிக்கூடங்களில் படித்த 2 ஆயிரத்து 836 மாணவ-மாணவிகளில் 2 ஆயிரத்து 681 பேர் வெற்றி பெற்றனர். இது 94.53 சதவீதமாகும்.

பவானி கல்வி மாவட்டத்தில் 73 பள்ளிக்கூடங்களில் படித்த 5 ஆயிரத்து 307 மாணவ-மாணவிகளில் 4 ஆயிரத்து 771 பேர் வெற்றி பெற்றனர். இது 89.9 சதவீதமாகும். சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் 63 பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரத்து 410 மாணவ-மாணவிகளில் 2 ஆயிரத்து 922 பேர் வெற்றி பெற்றனர். இது 85.69 சதவீத தேர்ச்சி பதிவாகும்.

கோபி கல்வி மாவட்டத்தில் 73 பள்ளிக்கூடங்களில் 4 ஆயிரத்து 343 மாணவ-மாணவிகளில் 3 ஆயிரத்து 898 பேர் வெற்றி பெற்றனர். இது 89.75 சதவீத தேர்ச்சியாகும்.

கல்வி மாவட்டங்கள் அளவில் பெருந்துறை கல்வி மாவட்டம் 94.53 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வெற்றியில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 20 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களின் விவரம் வருமாறு:-

1.பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

2.செம்மாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

3.கோபி குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

4.கோபி பி.வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

5.சுண்டக்காம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

6.கும்மக்காளிபாளைம் அரசு உயர்நிலைப்பள்ளி.

7.சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

8.தாமரைப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

9.நகப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

10.காரவலசு அரசு உயர்நிலைப்பள்ளி.

11.வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி.

12.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

13.மாத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

14.தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி.

15.திருவாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி.

16.தொப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

17.பெத்தாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

18.நிச்சாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

19.காடட்டி அரசு உயர்நிலைப்பள்ளி.

20.ஈரோடு பெரியவலசு அரசு உயர்நிலைப்பள்ளி.

மேற்கண்ட அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி அளித்து உள்ளன. கோபி வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அளித்து உள்ளது.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

மாநில அளவில் ஈரோடு மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியில் 16-வது இடத்தை பெற்று உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்