மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க கோரி கடையடைப்பு போராட்டம்- தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் தாசில்தார் அலுவலகத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-07 21:09 GMT

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் தாசில்தார் அலுவலகத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றம் அமைக்கக்கோரி...

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி ஆகிய பகுதிகளில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க முடிவு செய்திருந்தது. ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை மாற்றி எழுமாத்தூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டு்ம் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மொடக்குறிச்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து வசதிகளும் உள்ள மொடக்குறிச்சியில் தான் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொடக்குறிச்சி பகுதியில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டமும் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

முற்றுகையிட்டு போராட்டம்

அதன்படி நேற்று மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உள்பட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கினர். அதன்பின்னர் தாசில்தார் சண்முகசுந்தரத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள், 'மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க சமுதாயக்கூடத்தில் இடம் ஒதுக்கி தருகிறோம். எனவே எழுமாத்தூரில் நீதிமன்றம் அமைப்பதை கைவிட்டு மொடக்குறிச்சியிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

கலெக்டருக்கு...

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், 'இந்த மனு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு் அவரது முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்