எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஆர்.எம்.யு. மற்றும் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் சார்பில் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளன 100-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, ரெயில்வேயை தனியார்மயமாக்க கூடாது. பழைய பென்சன்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறும்போது, கடந்த 1974-ம் ஆண்டு மே 8-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் 23 நாட்கள் நடந்தது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை, ரெயில்வே பாதுகாப்புபடை, ராணுவத்தினர் தாக்கினர். இதில் 6,700 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 10,800 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். 527 பேர் சிறை தண்டனை பெற்றனர். எனவே இந்தநாள் எங்களுக்கான வீரவணக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளை மனுக்களாக நாங்கள் தொடர்ந்து கொடுக்க உள்ளோம். 1974-ல் நடந்த போராட்டத்தால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி எப்படி பதவியை இழந்தாரோ, அதேபோல மீண்டும் மாபெரும் போராட்டத்தை நடத்தி எங்களது பலத்தை காட்டுவோம் என்றார்.