சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

ஆரணியில் சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதனை அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாறி, மாறி தொடங்கி வைத்தனர்.

Update: 2023-09-24 12:24 GMT

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

விழா தொடக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அதற்குள் தி.மு.க. சார்பில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மேலாண்மை குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து பின்னர் தேரை வடம் பிடித்தனர்.

2 கட்சியினரும் மாறி மாறி தேரோட்டத்தை தொடங்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தேர் சின்னக்கடை தெரு, பழனி ஆண்டவர் கோவில் தெரு, பாட்ஷா தெரு, பெரிய ஜெயின் தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை இறைத்து வணங்கினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு வியாபாரிகள் வெள்ளநீர், நீர் மோர், குளிர்பானம் போன்றவைகளை வழங்கினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சிவாஜி, அறங்காவலர் குழுத்தலைவர் லதா பாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்