திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை வாலிபர் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை வாலிபர் உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2023-09-15 19:03 GMT

இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த உதயகுமாரின் மகன் மிதுலன் (வயது 28). இவருடைய உறவினர் புஷ்பராஜ் (43) விருதுநகர் மாவட்டம் குன்னூர் சந்தை இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்வதற்காக செம்மடம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் இருவரும் பதுங்கி இருந்த போது தங்கச்சி மடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.பின்னர் இருவரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டு, இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் புஷ்பராஜ் முகாமுக்கு திரும்பிவிட்டார். ஆனால் மிதுலன் மீது இந்தியாவில் போலி பாஸ்போர்ட் பெற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக மிதுலன் தொடர்ந்து சிறப்பு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். இதனால், தன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வலியுறுத்தியும், வழக்கை விரைந்து முடித்து தன்னை சொந்த நாட்டுக்கு அனுப்பக்கோரியும் மிதுலன் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.இதுபற்றி அறிந்த திருச்சி கே.கே.நகர் சரக உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மிதுலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று 2-வது நாளாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்