படகில் தனுஷ்கோடி வந்து தலைமறைவான இலங்கை வாலிபர் கைது
இலங்கையில் இருந்து படகில் தனுஷ்கோடி வந்து தலைமறைவான இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பனைக்குளம்,
இலங்கையில் இருந்து படகில் தனுஷ்கோடி வந்து தலைமறைவான இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அகதிகளாக வந்த தந்தை-மகன்
இலங்கை மன்னார்மாவட்டம் தோட்டவேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்(வயது 52), அவருடைய மகன் சிந்துஜன்(25). இவர்கள் இருவரும் படகு மூலம் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
அவர்கள் இருவரும் போலீஸ் நிலையம் செல்லாமல் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் முகாமில் வாழ்ந்து வரும் உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். அகதியாக பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து செல்வராஜ் மட்டும் கடந்த 19-ந்தேதி அன்று ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரது மகன் சிந்துஜன் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் ராமேசுவரம் வந்தால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என பயந்து வராமல் இருந்து விட்டார். செல்வராஜ் மண்டபம் கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அகதியாக பதிவு செய்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
வாலிபர் கைது
இந்த நிலையில் சிந்துஜன் நேற்று காலை மண்டபம் அகதிகள் முகாம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டு வந்து அவரை போலீசார் விசாரணை நடத்தி மண்டபம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் கடந்த 18-ந் தேதியன்று இலங்கையில் இருந்து வந்த செல்வராஜ் மகன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அது போல் இலங்கையில் இவர் மீது திருட்டு, அடிதடி, கஞ்சா, போதை பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் இலங்கையில் உள்ள போலீசாருக்கு பயந்து தமிழகம் தப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 3 நாட்களாக போலீஸ் நிலையத்திற்கு வராமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்த இவர் மீது மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினார். தொடர்ந்து இவர் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டார்.