இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்..!
வேதாரண்யம் அருகெ புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
நாகை,
வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற போது, நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வேதாரண்யம் மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த கொள்ளையர்கள், ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து, ஆற்காட்டுத்துறை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது முறையாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு செல்போன், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.