இலங்கை மறுவாழ்வு மைய குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும்
மேல்மொணவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கை மறுவாழ்வு மைய குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆய்வு
வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அமைச்சர் துரைமுருகன் சென்றபிறகு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் அந்தப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செஞ்சிமஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைவில் திறக்கப்படும்
முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 3,500 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக ரூ.222 கோடியில் 3,500 வீடுகள் கட்டப்பட உள்ளது. வேலூர் முகாமை பொறுத்தவரையில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 10 பேருக்கு வீடுகள் தேவை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு வீடுகள் கட்ட இடம் உள்ளதா? என்று அதிகாரிகளை ஆய்வு செய்ய தெரிவித்துள்ளேன். வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி வழங்க தயாராக உள்ளோம்.
மேலும் இங்குள்ள 68 குடும்பத்தினர் தங்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் வீடு கட்டிக் கொடுக்க தயாராக உள்ளோம். சிமெண்டு சாலை, தார்சாலை, குடிநீர் வினியோகம், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும். குடியிருப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும். நூலகம், ரேஷன்கடையும் அமைக்கப்படும். முதல்- அமைச்சர் கூறியதுபோன்று 100 சதவீதம் மக்களின் தேவை நிறைவேற்றித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, நந்தகுமார் எம்.எல்.ஏ., அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அமுதாஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடன்இருந்தனர்.
பதிவு செய்ய வேண்டும்
முன்னதாக வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களின் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது பலர் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு போலி ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். அங்கு வேலைபளு காரணமாக பலர் ஒருமாதத்திலேயே தாயகம் திரும்பி வருகின்றனர். இதில் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதுபோன்ற புகார்கள் அதிகம் வரப்பெறுகிறது. பலர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு வாரியத்தில் பதிவு செய்யாமல் செல்கின்றனர். எனவே இங்குள்ள வாரியத்தில் பதிவு செய்திருந்தால் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது வாரியத்தின் மூலம் உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.