நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். படகில் ஏறி அதில் இருந்த மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

Update: 2023-08-24 18:45 GMT

ராமேசுவரம், 

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். படகில் ஏறி அதில் இருந்த மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் விரட்டியடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 482 விசைப்படகுகளில் சுமார் 2500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காளிதாஸ், சக்தி, பாலா, அஜய், கரிகாலன், மாரி, முனீஸ்வரன், ஜார்ஜ் ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

அப்போது 4 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த படகுகளை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

மீனவர்கள் மீது தாக்குதல்

மேற்கண்ட 8 மீனவர்கள் இருந்த படகில் ஏறிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த மீன்களை பறித்தனர். படகில் இருந்த மீனவர்களையும் தாக்கினர்.

மீனவர் முனீஸ்வரனை இலங்கை கடற்படையினர் தள்ளியதில் அவர் படகின் மீதுள்ள கம்பியில் மோதி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நேற்று காலை கரை திரும்பிய பின்னர், ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் முனீஸ்வரன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

படகில் இருந்த மற்ற மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினருக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்