திருமணத்திற்காக பியூட்டி பார்லரில் அலங்காரம்: காதலியை சுட்ட போலீஸ்காரர்...! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காதலி...!

திருமணத்திற்காக பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டிருந்த மணப்பெண்ணை, காதலை நிராகரித்த ஆத்திரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுள்ளார்.

Update: 2023-05-22 13:40 GMT

கோப்புப்படம்

முங்கர்,

திருமணத்திற்காக பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டிருந்த மணப்பெண்ணை, காதலை நிராகரித்த ஆத்திரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகாரின் முங்கரில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் அபூர்வ குமாரி என்ற 26 வயது பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அழகு நிலையத்திற்குள் நுழைந்த அமன் குமார் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் தனது காதலை நிராகரித்ததற்காக அபூர்வ குமாரியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அபூர்வ குமாரியின் இடது தோளிலும் வலது பக்க மார்பிலும் குண்டு பாய்ந்தது.

பின்னர் அமன் குமார் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் பதட்டத்தில் அவரது கையிலிருந்து துப்பாக்கி கீழே விழுந்தது. இதையடுத்து அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது பார்லரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பித்து ஓடி விட்டார். இது தொடர்பான காட்சிகள் அழகு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபூர்வ குமாரி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தற்போது அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

குற்றவாளி மகேஷ்பூர் கிராமத்தில் வசிப்பவர். பாட்னாவில் பணிபுரிந்து வருகிறார். அவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவரை கைது செய்வோம் என்று முங்கர் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்