ஆட்டோ டிரைவர் பலியான காட்சிகள்சமூக வலைத்தளங்களில் பரவுகிறது

நாமக்கல்லில் சாலையோரம் நின்ற காரின் கதவை திறந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் அதில் மோதி பலியானார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தனங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-09-30 18:47 GMT

ஆட்டோ டிரைவர்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது34). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி, 5 ஆண்டுகளுக்கு பின்னர், அவரது மனைவிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

மனைவியுடன் தங்கி இருந்த சரவணன், மறுநாள் அதாவது ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வளையப்பட்டி செல்வதற்காக, நாமக்கல்லில் உள்ள டாக்டர் சங்கரன் சாலை வழியாக, தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கதவை திடீரென ஒரு பெண் திறந்து உள்ளார்.

பரிதாப சாவு

அந்த கார் கதவில் மோதிய சரவணன், சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரவணன் அங்கு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு காரை ஓட்டி வந்த நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தோல் டாக்டர் சித்ரா, சாலையின் இருபுறமும் பார்க்காமல் கவன குறைவுடன் கார் கதவை திறந்து இருப்பதே, காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்