தெருநாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
வயலோகத்தில் தெருநாய்கள் கடித்து புள்ளிமான் இறந்தது.;
அன்னவாசல் அருகே 1,500 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணா பண்ணை உள்ளது. இங்கு அதிகளவில் மான்கள் உள்ளன. தற்போது வெயில் காலம் என்பதால் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி காட்டைவிட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும், தெருநாய்களிடம் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று வயலோகம் அருகே உள்ள குறும்பக்குளம் பகுதியில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. இதைப்பார்த்த தெருநாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்து அப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.