முதல்-அமைச்சர் கோப்பைக்கு 50 வகையான விளையாட்டு போட்டிகள்
திருவாரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கு 50 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கு 50 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-2023 முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
50 வகையான போட்டிகள்
இதில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடைபெறகிறது.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்படுவர்.
மாநில அளவிலான போட்டி
அரசு ஊழியர்கள் எந்தவித வயது வரம்புமின்றி ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநில போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பரிசுத்தொகை
போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசுத்தொகையாக தனி நபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடத்துக்கு ரூ.3 ஆயிரம், 2-ம் இடத்துக்கு ரூ.2 ஆயிரம், 3-ம் இடத்துக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். இதேபோல் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையட்டரங்கம், திருவாரூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.